வடமத்திய மாகாணத்தில் 2,800 ஆசிரிய வெற்றிடங்கள் – வடமத்திய மாகாண ஆளுநர் தெரிவிப்பு

Advertisement
Continue Reading Below

(தினகரன் : 2020-10-31)

வடமத்திய மாகாண பாடசாலைகளில் 2800 இற்கும் அதிகமான ஆசிரிய வெற்றிடங்கள் காணப்படுவதாகவும்,இதற்கு மிக விரைவில் ஒரு தீர்வினை பெற்றுத்தருமாறு வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் ஆலோசனைக்கமைய ஒன்றிணைந்த ‘கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய திட்டம்’ இதன் முதற் கட்டம் (27) ஆம் திகதி அநுராதபுரத்தில் வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் கலந்து கொண்ட வடமத்திய மாகாண ஆளுநர் இக்கருத்தினை தெரிவித்தார்.

ஆளுநர் மஹிபால மேலும் தெரிவித்தாவது, ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்களின் ஒரு தொகையினர் ஓய்வு பெறுகின்றார்கள்.மற்றும் சிலர் மாகாண இடமாற்றம் பெற்று செல்கின்றார்கள். இதன் காரணமாக வருடா வருடம் பாரிய தொகை ஆசிரிய வெற்றிடங்கள் ஏற்படுகின்றது.அத்தோடு காலத்திற் கேற்ப கல்வி அமைச்சினால் பாடரீதியாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு அவர்களின் தகுதிக்கேற்ப நேர்முகப் பரீட்சைகள் மூலம் நியமனம் வழங்கப்படாமையும் தொடர்ச்சியான ஆசிரிய வெற்றிடங்களுக்கு ஒரு காரணமாக அமைகின்றது.

2017 ஆண்டிற்கு பின்னர் கல்வி நிருவாக சேவை போட்டிப் பரீட்சைகள் நடைபெறவில்லை.இக்குறைபாடு காரணமாக கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் குறைபாடு வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம்,பொலன்னறுவை மாவட்டங்களில் காணப்படுகின்றது.இதன் காரணமாகவும் வடமத்திய மாகாணத்தில் கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியாதுள்ளது.எனவும் இதன் காரணமாக கல்வித் துறை பின்னடைவுக்கு ஒரு காரணமாகவும் அமைகின்றது. இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க வடமத்திய மாகாணத்தில் 2800 ஆசிரிய வெற்றிடங்கள் காணப்படுகின்றது என வழங்கப்பட்ட தரவுகளின்படி தொடர்ச்சியாக தேவையான பாடங்களுக்கு ஆசிரிய வெற்றிடங்கள் நிலவுகின்றது.ஒவ்வொரு வருடங்களும் புதிய ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படுகின்றது.அப்படியிருந்தும் ஆசிரிய வெற்றிடங்கள் பூரணமாக நிரப்பப்படுவதில்லை. அதற்கான முக்கிய காரணம் வெற்றிடங்கள் காணப்படும் பாடங்களுக்கு நியமனங்கள் வழங்கப்படுவதில்லை.கணக்கியல் பாடத்தில் சிறப்பு பட்டம் பெற்றவர் ஒருவருக்கு ஆரம்பகல்வி நியமனம் வழங்கப்பட்டு ஆரம்ப பிரிவு பாடசாலைக்கு நியமிக்கப்படுகின்றார்.இது போன்று ஆசிரியர்கள் தரப்படுத்தி அவர்களின் தகுதிக்கேற்ப நியமனங்கள் வழங்கப்படுவதில்லை.பட்டதாரிகள் அறுபதாயிரம் பேருக்கு ஆசிரிய நியமனம் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தில் இதனை கருத்திற் கொண்டு நியமனங்கள் வழங்கப்பட்டால் ஆசிரிய வெற்றிடங்களுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக் கொள்ளலாம்.

-கல்நேவ தினகரன் விசேட நிருபர்-

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *