நீண்ட பாரம்பரிய வாரலாற்றை கொண்ட இலங்கையானது தன்னகத்தே விலைமதிக்க முடியாத வரலாற்றுச் சிறப்பு மிக்க பல்வேறு அம்சங்களை கொண்ட ஒரு குட்டித்தீவாகும். இலங்கையில் உள்ள எட்டு இடங்களை யுனெஸ்கோ நிறுவனம் உலக மரபுரிமைகளாக ஏற்றுக்கொண்டு பிரகடனம் செய்துள்ளது. இது சிறிய நாடான இலங்கைக்கு சர்வதேச அளவில் கிடைக்கும் ஒரு பெரும் மதிப்பாகும்.
உலக மரபுரிமைகளாக யுனெஸ்கோவினால் பிரகடனப் படுத்தப்பட்டுள்ள இலங்கையில் அமைந்துள்ள எட்டு இடங்களும் பின்வருமாறு.
- பழைய அநுராதபுர நகரம்
- பழைய பொலன்னறுவை நகரம்
- சீகிரியா
- தம்புள்ளை ரஜமஹா விகாரை
- காலி கோட்டை
- கண்டி தலதா மாளிகை
- சிங்கராஜ வனப் பகுதி
- இலங்கையின் மத்திய மலைநாடு
பழைய அநுராதபுர நகரம் – 01
அநுராதபுரமானது இலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு பிரதேசமாகும். இலங்கையின் பண்டைய தலைநகராக செயற்பட்ட ஒரு முக்கிய நகரமாக இது அடையாளம் காணப்படுகிறது. சிரிமகாபோதி, றுவன்வெலிஸாய, அப்பயகிறி போன்ற பல்வேறான பண்டைய புராதன கட்டடங்கள் இன்றும் இங்கு காணப்படுகிறது. இதன் வரலாற்று மற்றும் கலாசார முக்கியத்துவத்தை உணர்ந்து 1982 ஆம் ஆண்டு யுனெஸ்கோ வினால் இது உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டது
பழைய பொலன்னறுவை நகரம் – 02
12 , 13 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் பொலன்னறுவை இலங்கையின் தலை நகராக செயற்பட்ட ஒரு முக்கியமான வரலாற்று சிறப்புகள் பல நிறைந்த பண்டைய இலங்கையின் நாகரிகங்களை பறைசாற்றும் பிரதேசமாகும். சிதைவுற்ற பெளத்த, இந்து வழிபாட்டு நிலையங்கள், பண்டைய மன்னர்களின் சிறப்புமிக்க நிர்மாணங்கள் பல இங்கு இன்றும் காணக்கிடைக்கிறது. இங்கு காணப்படும் பாரம்பரிய பெளத்த, இந்து நினைவுச் சின்னங்களாக வட்ட தாகே, திவங்க சிலைமனை, ரன்கொத் விகாரை, கிறிவிகாரை, லங்காதிலக்கவிகாரை, நிசங்க லதா மண்டபம்,அரச மாளிகை , சத்மஹல் பிரஷாத,கல்விகாரை, சிவதேவாலயம், பராக்கிரம சமுத்திரம் போன்றவற்றை குறிப்பிடலாம். இது போண்ற புராதன நிர்மாணங்களின் முக்கியத்துவம் கருதி 1982 ஆம் ஆண்டு பொலன்னறுவை நகரம் உலக மரபுரிமைபப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டது.
சீகிரியா – 03
இலங்கைக்கு சர்வதேச அளவில் பெரும் புகழை கொண்டு வந்த ஒன்றாகவும் வருடந்தோரும் பல லட்சக் கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தன்வசம் ஈர்க்கக்கூடிய ஒன்றாக சீகிரியா விளங்குகிறது. இது இலங்கையை ஆண்ட பண்டைய மன்னன் காசியப்பனால் நிறுவப்பட்டதாகும். சீகிரியாவானது பழைய கோட்டை, அரச மாளிகை, கலைக்கூடம் என்பவற்றை உள்ளடக்கிய தனித்துவமான இடமாகும். இதன் சிறப்பு அது மலைக்குன்று ஒன்றில் அமையப்படிருப்பது ஆகும். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து 1982 ஆம் ஆண்டு அது உலக மரபுரிமைப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டது
தம்புள்ளை ரஜமஹா விகாரை – 04
இது இலங்கையில் உள்ள சித்திரங்களுடனான பாரிய குகை விகாரையாகும். இயற்கையான கல்லினுள் நிர்மாணிக்கப்பட்டுள்ள பெளத்த விகாரையான இது மிகவும் குளிர்ச்சியான ஆரோக்கியமான இடமாகும். இங்கு காணப்படும் சிறப்புவாய்ந்த சித்திரங்களின் காரணமாக 1991 ஆம் ஆண்டு இது உலக மரபுரிமைப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டது.
காலி கோட்டை – 05
ஆரம்பத்தில் காலி கோட்டையானது போர்த்துக்கேயரால் சிறிய அளவிலே கட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து இலங்கையை ஆண்ட ஒல்லாந்தரின் காலத்திலே இது விசாலமான விதத்தில் பாதுகாப்பான கோட்டையாக மாற்றம் பெற்றது. ஒல்லாந்தரின் கட்டடக்கலை, நினைவுச்சின்னங்கள் என்பவற்றை இன்றும் காலி கோட்டையில் காணக்கிடைக்கிறது. காலி கோட்டையானது இயற்கையான கடலை சூழ்ந்து இருப்பது அதன் தனித்துவமான சிறப்பாகும். காலி கோட்டையின் புரதான கட்டடங்கள் மற்றும் தொல்பொருள் சின்னங்கள் என்பவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து 1988 ஆம் ஆண்டு இது உலக மரபுரிமைப் பட்டியலில் இணைக்கப்பட்டது.
கண்டி தலதா மாளிகை – 06
கண்டியில் அமைந்துள்ள தலதா மாளிகையானது இலங்கையின் தனித்துவமான பாரம்பரிய கலாசாரத்தை உலகுக்கு பறைசாற்றும் முக்கியமானதொரு இடமாகும். தலதா மாளிகை மற்றும் அதோடு சூழ்ந்துள்ள பிரதேசங்கள் இலங்கைக்கு சர்வதேச அளவில் பெருமை சேர்க்கக் கூடிய ஒன்றாக விளங்குகிறது. கண்டியில் வருடாந்தம் இடம்பெறும் எஸல பெறஹர வரலாற்றுச் சிறப்புமிக்க இலங்கை நாட்டின் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் முக்கியமான அம்சமாக திகழ்கிறது. இவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து 1988 ஆம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனத்தால் உலக மரபுரிமைப்பட்டியலில் சேர்க்கப்பட்டது.
சிங்கராஜ வனப் பகுதி – 07
சிங்கராஜ மழை வனமானது இலங்கையில் அமையப்பெற்றுள்ள மிக முக்கியமானதொரு பாதுகாக்கப்பட்ட தேசிய வனம் ஆகும். இதன் அமைவிடமானது தெற்கு மாகாணம் மற்றும் சபரகமுவா மாகாண எல்லைப் பிரதேசம் ஆகும். இரத்தினபுரி, மாத்தறை, காலி என மூன்று மாவட்டத்தில் படர்ந்து விரிந்துள்ளது சிங்கராஜ வனம். இவ் வனமானது இலங்கைக்கு மற்றுமன்றி உலகுக்கே தனித்துவமான மழைக் காடாக கருதப்படுகிறது. அதன் சிறப்பம்சங்கள் விலை மதிப்பற்றது. சிங்கராஜ வனம் தனக்கே உரிய தனித்துவமான தாவரங்களை கொண்டுள்ளது அதன் முக்கியமான சிறப்பியல்வாகும். அது மற்றுமன்றி உலகில் அரிதாக காணப்படும் தவரங்கள் இங்கு தாராளமாக காணக்கிடைப்பது அதன் பெருமையாகும். மேலும் தாவரங்களுக்கு மட்டுமன்றி பல்வேறுபட்ட உயிரினங்களின் வாழ்விடமாகவும் சிங்கராஜ திகழ்கிறது. இதன் தனித்துவத்தையும் சிறப்பியல்புகளையும் உணர்ந்து 1988 ஆம் ஆண்டு இது உலக மரபுரிமைப் பட்டியலில் இணைத்துக்கொண்டது யுனெஸ்கோ நிறுவனம்.
இலங்கையின் மத்திய மலைநாடு – 08
மத்திய மலைநாடு முக்கிய மூன்று பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. அவை சிரிபாத, நக்கிள்ஸ் மலைத்தொடர் மற்றும் ஹோர்ட்டன் சமவெளியாகும். இது இயற்கையான மழை வனத்தையும் பசுமையான புல் வெளியையும் தன்னகத்தே கொண்டுள்ள இயற்கை சூழ்ந்த பசுமையான ஒரு பிரதேசமாகும். அது மாத்திரமன்றி இதில் உள்ளடங்கியுள்ள சிரிபாத மலையானது கலாசார ரீதியாகவும் அதி சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். உலகில் அழிவடைந்து சென்று விட்டதாக கருதப்பட்ட பல உயிரினங்கள் இன்றும் மத்திய மாலைநாட்டில் வாழ்வது இதன் சிறப்பாகும். இப்பிரதேசம் பல அரிய உயிரினங்களின் வாழ்விடமாக திகழ்வது இதன் தனித்துவமாகும். ஸ்ளெண்டர் ளொரிஸ் என்கிற அரியவகையான தேவாங்கு இன விலங்கு இன்னும் இங்கு வாழ்ந்து வருகிறது. இவ்விலங்கானது உலகைவிட்டே அழிவடைந்து சென்ற ஒன்றாக கருதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பல அரிய வகை தாவரங்களின் வாழ்விடமாகவும் மத்திய மலைநாடு காணப்படுகிறது. மத்திய மலை நாட்டின் சிறப்புகளை கருத்திற்கொண்டு சிரிபாத, நக்கிள்ஸ் மலைத்தொடர் மற்றும் ஹோர்ட்டன் சமவெளி உள்ளடங்கலாக 2010 ஆம் ஆண்டு உலக மரபுரிமையாக UNESCO நிறுவனத்தினால் பிரகடனப்பட்டுத்தப்பட்டது.
அறியாததை அறிந்திடுவோம்! அறிந்ததை பகிர்ந்திடுவோம். மேலும் இதுபோன்ற பல விடயங்களை பார்வையிட எம்முடன் இணைந்திருங்கள்!