2020 நோபல் பரிசு வெற்றியாளர்கள் ஒரு முழுப் பார்வை
2020 – நோபல் விருதுகள்
ஆல்பிரட் நோபலின் நினைவாக வருடந்தோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய 6 துறைகளுக்காக நோபல் விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன.
இவ்வருடத்துக்கான நோபல் விருதுகள் கடந்த ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் அறிவிக்கப்பட்டு இறுதியாக 12 ஆம் திகதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வெற்றியாளர் அறிவிக்கப்பட்டது. விருது அறிவிக்கப்பட்ட நபர்களுக்கும் அமைப்புக்களுக்கும் வழமை போன்று டிசம்பர் 10 ஆம் திகதி அன்று நடைபெறும் விழாவில் நோபல் பரிசும் உரிய பணமும் வழங்கி கெளரவிக்கப்படுவார்கள்.
Click Here : நோபல் விருது பற்றிய பொது அறிவு பார்வையிட
2020 – மருத்துவத்திற்கான நோபல் விருது
2020 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் விருதினை “ஹெபடைட்டிஸ் சீ” வைரஸை கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்கா விஞ்ஞானிகள் ஹார்வி.ஜே. ஆல்டெர், சார்ல்ஸ் எம்.ரைஸ் மற்றும் பிரித்தானியா விஞ்ஞானியான மிஷெல் ஹோட்டன் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கும் பகிர்ந்து வழங்கப்படுவதாக பரிசுக் குழு தலைவர் தாமஸ் பெர்ல்மென் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்தார். சர்வதேச அளவில் மாபெரும் சுகாதார பிரச்சினையாக உருவெடுத்துள்ள இரத்தத்தில் பரவும் ஹெபடைட்டிஸ் எனும் நோய்க்கு எதிராக சேவையாற்றியமைக்காகவே இவர்களுக்கு இவ்விருது வழங்கப்படவுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கணிப்பின் படி இதுவரை ஹெபடைட்டிஸ் நோயால் உலக அளவில் 70 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே இவ் விஞ்ஞானிகள் மூவரும் மருத்துவத்துறைக்கு பாரிய சேவையை நல்கியமைக்காக இவ் விருது வழங்கப்படவுள்ளது.
2020 – இயற்பியலுக்கான நோபல் விருது
2020 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு வானியல் கண்டுபிடிப்புக்களுக்காக வழங்கப்படுகிறது. அண்டவெளியின் கருந்துளை உருவாக்கம் என்பது பொதுவான சார்பியல் கோட்பாட்டின் வலுவான முன்கணிப்பு என்பதை கண்டுபிடித்ததற்காக பிரித்தானியாவைச் சேர்ந்த ரோஜர் பென்ரோஸ் எனும் விஞ்ஞானி பரிசின் பாதியை பெறுகிறார். எஞ்சிய பாதியை, நட்சத்திர மண்டலத்தின் மத்தியில் இருக்கும் ஒரு அதிசயமான சிறிய பொருளை கண்டுப்டித்ததற்காக விஞ்ஞானிகளான ஜேர்மனியை சேர்ந்த ரெயின்ஹார்டு ஜென்சல்லும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்ட்ரியா கெஸ்சும் சமமாக பெறுகிறார்கள்.
2020 – வேதியியலுக்கான நோபல் விருது
விலங்குகள், தாவரங்கள், நுண்ணுயிரிகளின் DNAக்களை துல்லியமாக கணிக்க உதவும் CRISPR-Cas9 எனப்படும் ஜீன் எடிட்டிங் தொழில்னுட்பத்தை உருவாக்கியமைக்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இமானுவேல் சார்பெடியார் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிஃபர் தூத்னா ஆகிய இரு பெண்களுக்கும் இவ்விருது வழங்கப்படவிருக்கிறது. இவர்கள் இருவரும் மேற்கொண்ட மரபணு மாற்றம் குறித்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட கருவியானது வேதியியல் துறையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் நீண்ட காலமாக மருந்து கண்டுபிடிக்கப்படாத நோய்களுக்கு தீர்வும் புற்று நோய்க்கு புதிய மருத்துவத்தையும், மருந்துகளையும் கண்டறிய முடியுமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளன. வேதியியல் துறையில் இதுவரை 5 பெண்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளன அதேவேளை விஞ்ஞானியான மேரிகியூரிதான் முதன் முதலாக இவ்விருதை வென்ற பெண் ஆவார்.
2020 – இலக்கியத்திற்கான நோபல் விருது
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் கவிஞர் லூயி க்ளூக்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிழையில்லா கவித்துவக் குரலும், அழகும் பொருந்திய இவரின் கவிதைகள் தனித்துவமான படைப்பாகும். சிறு வயதிலிருந்து எழுத்து மீது தீரா வேட்கை கொண்ட இவர் உலகிற்கு பல அரிய தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார்.
1968 – ஃபர்ஸ்ட்பார்ன் ( முதல் தொகுப்பு)
1992 – வைல்ட் ஐரிஸ்
2006 – ஃபைத்ஃபுல்
2014 – விர்ச்சுவல் நைட்
இவர் 12 கவிதைத் தொகுப்புக்களையும், கவிதைகள் குறித்த சில கட்டுரைகளையும் எழுதியுள்ளார். கடந்த பல ஆண்டுகளாக இலக்கியத்திற்கான நோபல் விருதில் பல்வேறு சர்ச்சைகள் நிகழ்கின்றமையால் 2018 ஆம் ஆண்டு இவ் விருது ஒத்திவைக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு இரு வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2020 – அமைதிக்கான நோபல் விருது
உலக உணவுத் திட்டம் (World Food Programme – WFP) என்கிற அமைப்புக்கு அமைதிக்கான நோபல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் இருந்து பசியை இல்லாமலாக்குவதற்கான முயற்சிகளையும், யுத்தங்கள் இடம்பெறும் பகுதிகளில் அமைதியை நிலை நாட்ட பங்களித்ததற்காகவும், பசியை ஆயுதமாகக் கொண்டு உருவாகும் மோதல்களையும், போர்களையும் உருவாக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை சுக்கு நூறாக தகர்த்தெறிய முக்கிய உந்து சக்தியாக உலக உணவுத் திட்டம் செயல்பட்டதால் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
கடந்த 58 ஆண்டுகளாக உலகம் முழுவதும் வறுமை மற்றும் பட்டினியில் வாடும் மக்களை ஆதரித்து உணவு அளித்தமையும் இத் திட்டத்தின் முக்கிய சேவைகளில் ஒன்றாகும். கடந்த 2019 ஆம் ஆண்டில் மட்டும் பசி, பட்டினியால் வாடிய 88 நாடுகளைச் சேர்ந்த 10 கோடி மக்களுக்கு உணவு வழங்கி பசியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
2020 – பொருளாதாரத்திற்கான நோபல் விருது
அமெரிக்காவைச் சேர்ந்த பொருளியல் மேதைகளான பால் ஆர் மில்க்ரோம் மற்றும் ராபர்ட் வில்சன் ஆகிய இருவருக்கும் 2020 ஆண்டின் பொருளியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பொருளாதாரத்தில் அக்கறை செலுத்தும் தரப்பினர்களான முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், வாங்குபவர்கள் மற்றும் வரி செலுத்துவோரை திருப்திப்படுத்தும் வகையில் ஏலக் கோட்பாடு மற்றும் புதிய ஏல வடிவங்களை கண்டுபிடித்தமைக்கே இவ் விருது வழங்கி கெளரவிக்கப்படுகிறது. இவர்கள் ஏல முறையில் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதன் விளைவாகவே ஏலக் கோட்பாட்டை மேம்படுத்தி புதிய ஏல வடிவங்களையும் கண்டறிந்து உலகுக்கு உதவுகின்றனர்.
முற்றும்!
Read More General Knowledge Posts :
Read : இலங்கையில் உள்ள யுனெஸ்கோ உலக மரபுரிமைகள் தொடர்பான பொது அறிவுத்தகவல்கள்
Read : இலங்கை அரசின் கெளரவ விருதுகள் பற்றிய பொது அறிவுத்தகவல்கள்
Read : இலங்கையின் தபால் சேவை பற்றிய பொது அறிவுத்தகவல்கள்